அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையில் அதிகார எல்லைக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடியாறு ஆகிய மீள்குடியேற்ற கிராமங்களுக்கான சுமார் 10கி.மீற்றர் நீளமான பாதை மிக நீண்ட காலமாக சேதமடைந்து குன்றும்,குழியுமாக காணப்படுவதாகவும் இதனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வீதியை புனரமைத்து கொடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மக்கள் 2015ஆம் ஆண்டு மீண்டும் குடியேறி வாழ்ந்து வரும் நிலையில் வெளிநாட்டு தொண்டு நிறுவனம் ஒன்றினால் 2009ல் இப்பாதை அமைந்துக் கொடுக்கப்பட்டு இருந்தன.
இப் பாதையானது வெறுமனனே மக்களின் பாவதைக்கு மட்டுமான பாதையாக இல்லை இப்பாதை விவசாய, கால்நடை, வனபரிபாலன திணைக்களம் கற்பாறைகளை உடைக்கும் தொழில்சாலை பலதரப்பட்ட தேவைகளுக்கான பொது பாதையாக அமைந்திருப்பதுடன் கூடுதலாக கனரக வாகனங்களின் பாவனைகளும் அதிகரித்த பாதையாக இருந்து வருவதுடன் தினமொன்றுக்கு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வகனங்கள் சென்று வரும் பாதையாகவும் தங்கவேலாயுதபுரம் கஞ்சிகுடிச்சாறு பிரதான பாதை அமைந்திருக்கின்றன.
இந்நிலையில் இப்பாதையானது தற்போது படுமோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுவதுடன் இங்கு வாழ்கின்ற மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக கிராமத்தில் இருந்து இப்பாதையின் ஊடாக சுமார் 15 கி.மீற்றர் தூரம் பிரயாணம் செய்து திருக்கோவில் நகருக்கு தினமும் வரவேண்டிய கட்டாய நிலைமைகள் காணப்படுகின்றன.
இதேவேளை கிராம வாசிகள் பிரதானமாக பயணிக்கின்ற வாகனங்களாக முச்சகக்கரவண்டிகள் சிறிய மோட்டார் வண்டிகள் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கில் என்பன கூடுதலாக பயன்படுத்தப்படுவதுடன் இவைகள் விரைவாக பழுதடைவதாகவும் விசனம் தெரிவித்துள்ளதுடன் இப்பாதையினால் இலங்கை போக்கு வரத்து பஸ் சேவை இடம்பெறுகின்ற போதிலும் அந்த பஸ் பல சிரமத்துக்கு மத்தியில் தான் பஸ் சேவை இடம்பெறுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நாட்டில் பாதை அபிவிருத்தி பிரதான வேலைத்திட்டமாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் மீள்குடியேற்ற கிராமங்களுக்காக பாதையை பார்வையிட்டு விரைவாக புனரமைத்து கொடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை ஒன்றினை விடுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ் வீதி புனரமைப்பு தொடர்பாக திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன் அவர்களிடம் கேட்டபோது தற்போது தங்கவேலாயுதபுரம் கஞ்சிகுடிச்சாறு வீதியினை புனரமைப்பதற்காக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் 5மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் விரைவில் புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் இன்று தெரிவித்து இருந்தார்.







