ஒரு நாடு ஒரு ஆட்சி ஒரு நீதி என்பதை உருவாக்கி இந்த நாட்டை மாற்றிக் காட்டுவோம் அதற்காக கிறிஸ்தவ, தமிழ் அடிப்படை வாதத்தினை எதிர்க்கின்ற முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொள்ளவேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்த ஞானசார தேரர் அழைப்புவிடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு கடுவப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளை நேற்று சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவரும் எதிர்பாராத நேரத்தில் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார் என்பது இன்னமும் தெரியவில்லை. இதற்கான காரணத்தினை யாரும் புரிந்து கொள்ளவில்லை ஏதோ வீதி விபத்தைப் போன்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். வீதிவிபத்தை ஏற்படுத்தியவருக்கு வழங்கப்படும் தண்டணை போன்று இந்த குண்டுத் தாக்குதல் நடாத்தியவர்களுக்கும் தண்டனை வழங்கப்படுகின்றது.
பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் நன்மையும் இருக்கின்றது தீமையும் இருக்கின்றது. புலனாய்வு அதிகாரிகளை அழைத்து விசாரணை செய்வது தீமையானது. ஆனால் தீவிரவாதிகள் அடிப்படை வாதிகளை அழைத்து விசாரணை செய்து நாட்டிற்கு தெரியப்படுத்துவது வரவேற்கத்தக்கது. இதன் முன் பிரதமரோ ஜனாதிபதியோ ஆஜர் ஆவார்கள் என்பதில் நம்பிக்கையில்லை.
நாட்டில் அடிப்படை வாதிகளையும் இஸ்லாமிய தீவிரவாதிகளையும் இல்லாது ஒழிப்பதற்கு எங்களை நாம் அர்ப்பணித்துள்ளோம். இதனை ஆதரிக்கின்ற கிறிஸ்தவ மக்கள் தமிழ் மக்கள் இஸ்லாமிய மக்கள் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுகின்றோம்.
ஜூலை மாதம் 7 ம் திகதி கண்டி மாநகரில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கின்றோம். எமது நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் வேண்டும். அவருக்காக இவருக்கா நாம் ஆதரவு என்பது பிரச்சினை அல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பேச்சு வார்த்தைகளை நடாத்தி அதன் மூலம் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிப்போம்.
ஜனாதிபதித் தேர்தலா அல்லது மாகாணசபைத் தேர்தலா முதலில் வரும் என்று தெரியாது. ஆனால் தனியான பலம்மிக்க அரசு ஒன்றினை உருவாக்குவதற்காக அதற்கு ஆதரவளிக்கும் கத்தோலிக்கர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும். கடந்த காலங்களில் பிழைகள் சில இடங்களில் நடைபெற்றுள்ளது. அதன் காரணமாக நாம் வீழ்த்தப்பட்டோம். ஆனால் அந்த பிழைகள் அனைத்தையும் சரி செய்து கொண்டு முன்னேறவேண்டும். அதற்கான காலம் தற்போது கிடைத்திருக்கின்றது. இதுவரை காணப்படும் அனைத்து அரசியல் தலைவர்களையும் மக்கள் புறக்கணித்து உள்ளார்கள். எனவே நாம் எந்த கட்சிகளையும் சாராமல் எமது நிலைப்பாட்டை ஜுலை 7ம் திகதி மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.








