உயர் கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 15 பில்லியன் ரூபா நிதி வரவு செலவு திட்டம் ஊடாக ஒதுக்கீடு செய்துள்ளதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், உயர்கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் சகல வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள மருத்துவ சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், உயர்கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுன்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
7 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் மருத்துவபீடம் மற்றும் சௌக்கிய பராமரிப்ப பீடம், நிர்வாக கட்டடம், மாணவர் தங்குமிடம், விரிவுரையாளர்கள் தங்குமிடம், விளையாட்டு மைதானம் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த கட்டட தொகுதி அமைக்கப்படவுள்ளது.
இதற்கான நிதியொதுக்கீட்டை உயர்கல்வி அமைச்சு வழங்கியுள்ளதுடன் இந்த கட்டிட தொகுதி இரண்டு வருடங்களுக்குள் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர். (நி)