அம்பாறை மாவட்டத்தில் நிலவிவரும் உச்ச வரட்சி காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் நீரின்றி அலைந்து திரிவதுடன் கண்ணகி கிராமம் உள்ளிட்ட சில கிராம மக்கள் குடிநீரின்றி அல்லலுறுவதை காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கால்நடைகள் குடிநீருக்காக வீதிகளில் அலைந்து திரியும் அதேவேளை மனிதனின் அத்தியாவசிய தேவைப்பாடுகளில் ஒன்றான குடிநீர் இன்றி தவிக்கும் 550 இற்கும் மேற்பட்ட கண்ணகி கிராம குடும்பங்களின் அவல நிலை எமது கமராவின் கண்களுக்குள் பதிவானது.
கிராமத்தின் அருகில் உள்ள அறுகளும் குளங்களும் நீரோடைகளும் நிரின்றிவற்றி வரண்ட நிலையில் காணப்படுவதால் வீடுகளில் உள்ள கிணறுகளும் நீர் வற்றி காணப்படுகின்றது.
இதனால் அன்றாடம் தொழில் செய்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொழுது விடியும் போதுதொழிலுக்காக செல்ல காத்திருக்கும் மக்களிடையே இக்கிராமமக்கள் குடிநீருக்காக காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச சபை வவுசர்கள் மூலம் குடிநீரை அவ்வப்போது வழங்கி வந்தாலும் அதன் மூலம் மக்களின் ஒட்டு மொத்த நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படாத நிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் 1985ஆம் ஆண்டு குடியேற்ற கிராமமாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவினால் உருவாக்கப்பட்ட இக்கிராமத்திற்கு இதுவரையில் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்பதே கிராமத்து மக்களின் ஏக்கமும் கேள்வியுமாக மாறியுள்ளது.
ஆனாலும் கடந்தவருடம் அம்பாரைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் முயற்சியால் குறித்த கிராமத்திற்கான குடிநீர் இணைப்பை வழங்க அரசாங்கமும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சும் நடவடிக்கையினை எடுத்தது.
அதன் பிரகாரம் பனங்காட்டுப் பாலத்தினூடாக குடிநீரை கொண்டு செல்வதற்கான திட்டமும் முன்மொழியப்பட்டதுடன் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கான குடிநீரை பெற்றுத்தர உரிய அதிகாரிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.