பௌத்த மதத்தை, இலங்கை நாட்டின் பிரதான கலாசார உரிமையாக பார்க்கின்றேன் என, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில், தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு, 3 மாதங்கள் பூர்த்தியாகின்றன.
இந்த துக்கநாளை நினைவுகூரும் வகையிலும், உயிர்நீத்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தும் பூசை நிகழ்வும், கொழும்பு பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்று இரவு நடைபெற்றது.
இதில், பௌத்த தலைமைப் பிக்குகள், கத்தோலிக்க பாதிரியார்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்ததுடன், கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையும் அழைக்கப்பட்டிருந்தார்.
இங்கு உரையாற்றிய கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை,…
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நான் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு விரைந்தேன்.
அங்கு சென்று பார்த்தவுடன், அவ்வாறான தாக்குதல்களை சாதாரண மனிதர்களால் மேற்கொள்ள முடியாது என்றும், மாறாக வெளிநாட்டுக் குழுவொன்றின் வழிநடத்தலின் கீழ், இப்படியான தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்பதை அறிந்து கொண்டேன்.
சாதாரண முஸ்லிம் மக்களால் இப்படியான மூர்க்கத் தாக்குதலை நடத்த முடியாது. ஆகவே, சர்வதேச ரீதியிலான தீவிரவாதக்குழு அன்று தற்கொலைத் தாக்குதலை நடத்திய நபர்களை தங்களது இலக்குகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
அப்போது நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டு, நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முயற்சி இடம்பெற்ற போதிலும், அதற்கு நாம் இடமளிக்கவில்லை.
கலவரங்கள் ஏற்படுவதை, பௌத்த தர்மத்தினூடாக கற்றுக் கொண்ட பொறுமையினால் தவிர்த்துக் கொள்ள முடிந்தது.
3 மாதங்களாகியும், இந்தக் கலவரத்திற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாமற்போனது.
நாட்டில் ஏற்பட்ட படுகொலைகள், கடத்தல்கள் தொடர்பான உண்மைகள் கால்துடைப்பானுக்குள் மறைத்து வைக்கின்ற கலாசாரம் இருப்பதனால், உண்மை நிலவரம் தெரியாமற்போகிறது. எமது நாட்டுத் தலைவர்களின் இயலாமையும் பலவீனமுமே இதற்குக் காரணமாகும். சர்வதேச நாடுகளுக்கு முன்பாக தலைகுணியும் பழக்கம், எமது நாட்டு அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.
எமது நாட்டு பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்காமல், சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணியும் வளர்ச்சி, இங்கு உள்ளதால்தான் தீவிரவாத தாக்குதல் பற்றிய விசாரணைகள் பின்னடைவதற்குக் காரணமாகும்.
ஐக்கிய நாடுகள் சபை என்பது, சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்த மிகப் பெரிய நாடுகளின் கூட்டுச்சேர்க்கையாகும்.
இது அநீதியாகும்.
பாலஸ்தீனம் பற்றிய யோசனைகள் கொண்டுவரப்பட்டால், அவற்றை நிறைவேற்ற அமெரிக்கா தடைவிதித்து வரும்.
ஏனென்றால் நேட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் உட்பட, இந்த ஐ.நா சபையானது, சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ளமை ஆகும்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால், எமது நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களால், எமது பாதுகாப்பு படை, புலனாய்வுப்பிரிவு முழுமையாக பலவீனமைந்தன.
மாவநெல்ல பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்டது மற்றும் குண்டுகள் தயாரிப்பு நிலையம் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், ஐ.நாவின் ஆலோசனைப்படி புலனாய்வுப் பிரிவைப் பலவீனப்படுத்தியதோடு, இது குறித்த விசாரணைக்கூட முன்னெடுக்கப்படவில்லை.
அதனால், மக்கள் மீதான குண்டுத்தாக்குதல்களே தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டன. அரசாங்கம் இதனை அறிந்து கொண்ட போதிலும், நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுபோன்ற விவகாரங்களில் நாங்கள் சுதந்திரமாக தீரமானம் எடுக்க வேண்டும். ஐ.நாவின் ஆலோசனைக்கூட பெறத்தேவையில்லை.
அவர்களுக்கு அவசியமான நாடகத்தை அரங்கேற்ற நாங்கள் தயாராகத் தேவையில்லை. இலங்கையின் பிரதான மதக் கலாசார உரிமை பௌத்த தர்மமாகும். இது ஏனைய மதத்தவர்களுக்கும் அதேபோல எமக்கும் மிகப்பெரிய சக்தியாகும்.
பௌத்த மதத்தின் நிழல் எமக்கு சிறுவயதிலிருந்தே கிடைத்திருக்கிறது. புத்த பெருமானின் உபதேசங்களிலுள்ள காணப்படும் பிரதான விடயங்கள், எமது வாழ்க்கைக்கும் பொருந்தும்.
ஆகவே பௌத்த மதம்தான், இந்த நாட்டின் பிரதான கலாசார உரிமையாக நான் பார்க்கின்றேன். பௌத்த கலாசார, பழக்க வழக்கங்களை நாங்கள் பாதுகாப்பது அவசியம்.
அரசியல் மேடைகளில் சிலர் தெரிவிக்கின்ற விடயங்களை, எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிக்குமார்கள் மீது எமக்கு சிறந்த நேசமுள்ளது.
மூளை சிதைந்த சில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிலர் கூறுகின்ற விடயங்களினால், தேரர்கள் வீணாக குழப்பமடைய வேண்டாம்.
மகாநாயக்க தேரர்கள் இந்த நாட்டிற்கு செய்கின்ற பணிகளை முக்கியமானவை என்றே கூறுகிறோம். இந்த நாட்டில் யார் எந்த மதத்தை பின்பற்றினாலும், இந்த நாட்டின் ஒரேயொரு உரிமையாக மதமாக, பௌத்த மதம் விளங்குகின்றது என்பதை மிகத்தெளிவாக ஏற்றுக் கொள்கின்றோம்.
அதனை யாராலும் மாற்ற அவசியமில்லை. சிலர் நாத்தீக கலாசாரத்தை தலையின்மேல் வைத்துக்கொண்டு செயற்படுவதை பழகிக்கொண்டுள்ளனர்.
இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் சென்றே இந்தப் பழக்கத்தைப் பற்றிக்கொண்டுள்ளனர். இந்த நாத்தீக பழக்க வழக்கங்கள், வெளிநாடுகளில் இருந்தவை.
மேற்குலக நாடுகள் கிறிஸ்தவ நாடுகள் என்ற போதிலும், அங்கு கிறிஸ்துவைப் பின்பற்றுவதில்லை. அதனால் பௌத்த மதக் கலாசாரத்தைக் கொண்ட இந்த நாட்டிற்குள், இன்னுமொரு மதத்தைப் பின்பற்றும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.
ஆகவே அந்த முட்டாள்களின் மூடத்தமான பேச்சுக்களையிட்டு குழப்பமடையத் தேவையில்லை. ஒரு கிறிஸ்தவ பாராளுமன்ற உறுப்பினர் தன்னை கிறிஸ்தவன் என்று அடையாளப்படுத்தி, பௌத்த பிக்குகளுக்கு ஏற்படுத்திய அவமதிப்பையிட்டு கவலையடைகின்றேன்.
அவ்வாறு கூறியவர் உண்மையிலேயே கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரா என்பது எமக்கு சந்தேகமாக உள்ளது.
கத்தோலிக்க மதத்தவர் என்று முற்றுகையிட்டுக் கொண்டாலும், உண்மையாக கத்தோலிக்க நபர் இவ்வாறு பேசுவதில்லை.
மதத் தலைவர்களை அவமதிப்பதை எந்த மதமும் ஏற்றுக் கொள்ளாது. புத்தபெருமான் எவ்வளவு பொறுமைசாலி என்பதை எமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எனவே அந்த முட்டாள்களின் மூடத்தனப் பேச்சுக்கள், எமது நாட்டு அவையிலேயே பேசுவதைப்போல பேசியுள்ளார்’. என குறிப்பிட்டுள்ளார். (சி)









