இலங்கை மற்றும் இந்திய படைகளுக்கு இடையில் நல்லிணக்கம் ஒன்றினை உருவாக்கும் வகையில் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கும் இலங்கைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்தோர் இந்தியாவிற்கும் பரஸ்பர விஜயம் ஒன்றினை செய்துள்ளனர்.

இந்த விஜயம் நேற்றயதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் ஆரம்பகட்டமாக இந்தியாவின் முப்படைகளையும் சேர்ந்த 159 பேர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கை வந்துள்ளனர். இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 95 வீரர்கள், 32 கடற்படையினர் 32 இந்திய விமானப்படையினர் தமது குடும்பத்தினர் சகிதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை வந்த இந்திய படையினர்களை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் மகேஸ் சேனாநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றார். நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர்கள் மத்திய மற்றும் மேற்கு பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லவுள்ளனர்.

இதேவேளை இலங்கை பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த 162 பேர் தமது குடும்பங்கள் சகிதம் இந்தியாவிற்கு பயணமாகியுள்ளனர். பொசன் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள புத்தகயாவை தரிசிக்கும் இவர்கள் மதத் தலங்கள் பலவற்றிக்கும் செல்லவுள்ளனர்.

இலங்கை மற்றும் இந்திய படைகளுக்கு இடையில் நல்லுறவினை ஏற்படுத்தும் வகையில் இந்திய விமானப்படையால் இவர்களுக்கான விசேட விமானப் போக்குவரத்துக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த 9ம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இரு நாட்டுப் படைகளுக்கும் நட்பு நாட்டிற்கு பரஸ்பர பயணத்தினை மேற்கொண்டுள்ளன. (மு)

Previous articleமுல்லைத்தீவில் பொசன் வலயங்கள் (படங்கள் இணைப்பு)
Next articleகப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டு நபர்கள் மூவர் கைது