தனது ஆட்சிக் காலத்தில் குப்பையினை கன்டைனர்களில் கொண்டுவருவதற்கான வர்த்தமானி உருவாக்கப்பட்டிருந்தாலும், அக்காலத்தில் குப்பைகள் நாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நடைபெற்ற பிரித் ஓதும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச…
வைத்தியசாலைகளில் வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்படாது அவசர அவசரமாக வந்து வைத்தியசாலையை திறந்து வைப்பதில் பயன் இல்லை. பரிபூரணமான வசதிகள் இல்லாது வைத்தியர்களினால் சிறந்த சேவையினை வழங்க முடியாது.
எங்கள் ஊரில் நாங்கள் அமைத்த வைத்தியசாலை இது. சமல்ராஜபக்ச அவர்களின் கடுமையான உழைப்பினால் உருவான வைத்தியசாலையான இதில், மக்கள்; எதிர்பார்க்கும் நிகழ்வில் நாம் கலந்து கொள்வது கட்டாயமானது.
இங்கே இன்னமும் விடுதிகள் அமைத்து கொடுக்கப்படவில்லை. இன்னமும் பல பணிகள் செய்ய வேண்டி இருக்கின்றது. குறையொன்றும் இல்லை என்றால் எங்கே விடுதியினை அமைத்து தரச்சொல்லுங்கள். வெறுமனே குற்றச்சாட்டுக்களை கூறிக்கொண்டு பொய்யான வேலையினை செய்து வருகின்றார்கள்.
எங்கள் ஆட்சிக்காலத்தில்;தான் குப்பையினை கன்டைனர்களில் கொண்டுவருவதற்கான வர்த்தமானி உருவானதாக கூறுகின்றார்கள். அது சரி. ஆனால் எமது ஆட்சிக்காலத்தில் இவ்வாறான குப்பைகள் கொண்டுவரப்படவில்லை. இந்த குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மங்களசமரவீர நல்ல பதிலை வழங்கியிருக்கின்றார்.
எனவே எமது ஆட்சிக்காலத்தில் கொள்கலன்கள் அனைத்தும் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுத்தான் உள்ளே அனுமதிக்கப்படும் இந்த அரசாங்கத்தில் அப்படி நடக்கவில்லையே உள்ளே அனுமதித்து இருக்கின்றார்கள்.









