அரசியல் தலைவர்களின் தவறுகள் காரணமாக, எமது சகோதர சகோதரிகள் உள்ளிட்ட இலட்சக்கணக்கானோரை இழந்தோம் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எமது அரசியல் தலைவர்களின் பிழையான அணுகுமுறையின் காரணமாக தான், எமது மக்கள் துன்பப்படுகிறார்கள்.
அவர்களை துன்பத்தில் இருந்து மீட்க வேண்டியது, எம்மைப் போன்ற அரசியல்வாதிகளின் பொறுப்பு.
வடக்கில் 30 வருட யுத்த தாக்கத்தின் காரணமாக பல அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது.
எனினும் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர், பல அபிவிருத்திகளை வடக்கில் மேற்கொண்டுள்ளோம்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், வடக்கிற்கு விஜயம் செய்து, நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த பல மக்களுக்கு, நான் உதவிகளை வழங்கியிருந்தேன்.
அன்றிலிருந்து இன்று வரை, நான் இருக்கும் அமைச்சு மக்களுக்கு பல அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளது.
தெல்லிப்பளை வைத்தியசாலை சேவையை, வெகு விரைவில் முன்னேற்றவுள்ளோம்.
விரைவில் மாங்குளத்தில் இதைப்போல ஒரு அபிவிருத்தியை உருவாக்கவுள்ளோம். உலக வங்கியின் முக்கிய கருத்தின்படி, இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின், சுகாதாரத்தையும் கல்வியையும் மேம்படுத்த வேண்டும்.
எனினும் அபிவிருத்தி திட்டங்களின் மூலம், எதிர்காலத்தில் வட கிழக்கு மாகாணம் அனைத்து வசதிகளையும் கொண்ட நிலையங்களாக மாறும். என குறிப்பிட்டுள்ளார். (சி)