நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக, இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், இன்று மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரையான ஒரு மணி நேரம், இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதன் போது, அரசியற் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தமிழர்களைக் கொல்லாதே, சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளின் மருத்துவத்தில் சிறைச்சாலை நிர்வாகமே அசமந்தம் காட்டாதே போன்ற கோசங்களை எழுப்பியவாறும், குறித்த கோசங்களை பதாகைகளில் தாங்கியவாறும், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கNஐந்திரன், அக் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஷ், கட்சியின் மகளிர் அணித் தலைவி உட்பட கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது மக்கள் எனப் பலர் இணைந்து கொண்டனர்.(சி)