நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட்டு, புதிய அரசு ஒன்று உருவாகும் சூழல் நெருங்கிய இவ்வேளையில், அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் நாம் பேசுவது பலனளிக்கப்பேவாதில்லை என்றும், அமையபோகும் புதிய அரசில்தான் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் புதிய அரசியலமைப்பு ஏன் தாமதமாகின்றது என்பதை வலியுறுத்தும், பிரேரணை நேற்றைய தினம் பாராளுமன்றில் முன்மொழியப்பட்ட நிலையில், அதன்மீது இன்றும் விவாதம் இடம்பெற்றது.
குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச…
ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படுவதற்கு இன்னும் ஒருசில மாதங்களே காணப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியில், அரசியலமைப்பு தொடர்பில் பேசுவது பொருத்தமானதல்ல. தேர்தல் நடாத்தப்பட்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னரே அது தொடர்பில் விவாதிக்க வேண்டும். இப்பொழுது இந்தக் குறுகிய காலப்பகுதியினுள் அரசியலமைப்பு தொடர்பில் பேசக்கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் அரசியலமைப்பு மாற்றத்தினை கொண்டுவருவதாக தெரிவித்தனர். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக கூறினார்கள் என்ன நடந்துள்ளது?
எங்களுடைய 2015 ஆம் ஆண்டு தேர்தல் யாப்பினை எடுத்துப்பாருங்கள், தேர்தலின் பின்னர் அரசியலமைப்பினை மாற்றுவோம் என கூறினோம். ஆனால் 19 ஆவது திருச்சட்டத்தை மாத்திரமே கொணர்ந்தனர்.
அதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு வழங்க காரணம் 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவருவோம் எனகூறியதனால்தான் ஆகும்.
கடந்த ஜனவரி மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட புத்திஜீவிகளின் குழு அறிக்கையானது தனது அறிக்கையில்லை என பிரதமர் கூறுகின்றார். இதனால்தான் இறுதியில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு உரிமையாளர் இல்லாமல் ஆனது.
ஆகவே தாமே தயாரித்த அறிக்கைக்கு உரிமைகோர முடியாத தரப்பு எவ்வாறு புதிய அரசியலமைப்பினை கொண்டுவரும்.
நாம் பிரதமரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசியமைப்புக்கு கடும் எதிர்ப்பினை முன்வைக்கின்றோம். காரணம் இதனால் நாடு 9 பிளவுகளாக பிரிபடும், 9 நாடுகளை உருவாக்கும் வாய்ப்பும் இதனால் எழுந்துள்ளது. புதிய அரசியலமைப்பின் ஊடாக மாகாணத்திற்கு வழங்கப்படும் அதிகாரங்களை மீண்டும் மத்தி எடுத்துக்கொள்ளாத விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எனது ஆட்சிக்காலத்தில் சில விடயங்களை நான் முன்வைத்தபோது அவை பதின்மூன்றினை தாண்டியவையாக உள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அதனை நான் இன்றும் ஏற்றுக்கொள்கின்றேன். எனது முன்வைப்புக்களில் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கம் எவையும் இருக்கவில்லை. நாட்டை பிளவுபடுத்தாமல்தான் 13 பிளஸை முன்வைத்தேன்.
பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு மாற்ற விடயத்தில் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என குறிப்பிட்டனர். இதனடிப்படையில்தான் கடந்த முறை உள்ளூராட்சி தேர்தலை மாற்றி நடத்தினார். ஆனால் பின்னர் உள்ளூராட்சி தேர்தல் அமைப்பு முறை தவறு என அவர்களே கூறுகின்றனர். இதனையும் மாற்ற முயல்கின்றனர் இதற்கு எமது எதிர்ப்பினை வெளியிடுகின்றோம்.
பிரதமர் ஜனவரி மாதம் சமர்ப்பித்த அறிக்கை எம்.ஏ.சுமந்திரனுடைய அறிக்கை என்றும், அரச சார்பற்றவர்களுடைய அறிக்கை என்றும் கூறுகின்றனர்.
இரண்டரை வருடங்கள் தாயரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையும் தம்முடையதல்ல என தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இறுதியாக பார்க்கின்றபோது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது.
கிழக்கு மற்றும் வடக்கு மகாண தேர்தல்கள் நீண்ட காலமாக இடம்பெறவில்லை இது குறித்து கூட்டமைப்பு பேசவில்லை.
இவ்வாறு மாகாண சபை தேர்தல்களை நடாத்த முடியாது போனமைக்கான காரணம் இந்த அரசாங்கம் 2017 ஆம் ஆண்டு தேர்தல் முறைமையினை மாற்றியமைத்ததே ஆகும்.
இவ்வாறு எல்லா விடயங்களிலும் நம்பிக்கையீனம் ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் எதிர்க்கட்சி என்ற ரீதியில், புதிய அரசியலமைப்பிற்கு ஒத்துழைப்பினை வழங்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.
எனவே அரசு இறுதிச் சந்தர்ப்பத்தில் இருக்கும் இந்நிலையில் அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதில் எவ்வித பிரியோசனமும் இல்லை.
இப்படிப்பட்ட செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டியது மக்களது விருப்பத்தில் அரசாங்கம் வந்த புதிதில்தான். எனக்குறிப்பிட்டார். (சி)