எதிர்வரும் 5 ஆம் திகதி முதல், கல்விப் பொதுத் தரா தர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி, ஒலி பெருக்கி பாவனையை கட்டுப்படுத்துமாறு, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்பொழுது கல்விப் பொதுத் தரா தர உயர் தரப் பரீட்சைக்காக கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலி பெருக்கிகள் பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ள நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இவ்வாறான ஒலி பெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துமாறு, வைபவங்கள் மற்றும் விழாக்களை ஒழுங்குபடுத்துவோரிடம், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலி பெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் அமுல்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வட மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும், 5 மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும், மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கும், ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இம்முறை, எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர் தரப் பரீட்சை, ஆகஸ்ட் 31 ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது.

வட மாகாணத்தில், 15 ஆயிரத்து 213 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 3 ஆயிரத்து 857 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இந்த நிலையில், வட மாகாணத்தில் 217 பரீட்சை நிலையங்களில் உயர் தரப் பரீட்சை நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (சி)

Previous articleத.தே.கூ பா.உ சுமந்திரன் எச்சிரக்கை!
Next articleஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது ஸ்ரீ.பொ.மு : லக்ஷ்மன்