சமுர்த்தி திட்டத்தினூடாக, வருமானம் குறைந்த மக்களுக்கு பல்வேறு துறைகளில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ‘சிப்தொற’ புலமைப் பரிசில் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்காக சமுர்த்தி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கல்வி பொதுத் தராதரம் சித்தியடைந்த மாணவர்கள் தங்களது உயர் கல்வியை தொடர்ந்து செல்வதற்காக மாதாந்தம் தலா 1,500 ரூபா இரண்டு வருடங்களுக்கு பெற்றுக்கொள்ள முடிகின்றது.

இத்திட்டத்தின் கீழ் அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து, புலமைப்பரிசில் திட்டத்திற்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத்தேர்வு, இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.நிஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.எம்.நஸீல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இதற்காக, பிரதேச செயலகப் பிரிவின் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி ஆகிய கிராமங்களிலிருந்து தற்போது கல்வி பொதுத்தராதர உயர்தரத்தில் கல்வி பயிலும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

தற்காலத்தில் ஆண் மாணவர்களை விட பெண் மாணவிகளே கல்வித்துறையில் அதிகம் சாதிக்கக் கூடியதாகவுள்ளதுடன், சமூக வலைத்தளங்கள் மற்றும், கையடக்க தொலைபேசி உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஆண் மாணவர்கள் அதிகம் அக்கறை செலுத்துவதால், உயர் கல்விக்காக தெரிவு செய்வதில் வெகுவாக குறைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது என, உதவி பிரதேச செயலாளர் நஸீல் இதன் போது தெரிவித்தார். (சி)

Previous articleமட்டு. காத்தான்குடியில் டெங்கு விழிப்புணர்வு குழு அமைக்கும் கூட்டம்
Next articleகூட்டமைப்பினர் வாக்குகளை பெறுவதற்காக இனவாத பிரசாரம் : லக்ஷ்மன்